Saturday 22 December 2012

அந்த ஒன்பது மாதங்கள் - உனக்கானவை !


வலி மிகுந்த நாட்களின் 
வீண் சுமையாய் -எண்ணி 
உனை சுமந்தேன்.
நல்ல சோறு இல்லை, ஆழ்ந்த  தூக்கம் இல்லை 
வறுமையும்,நம்பிக்கையீனங்களுமே 
உனக்கான உணவாய் என்னுள் இருந்தன 
பதுங்கு  குழியில் பாதி நாளும் 
பக்கத்து சுவரிலும் 
ஒற்றனின் காதோ என்று 
மீதிப் பொழுதும்
 நிமதியற்றே கழிந்தது.
கிடைத்த அரச வேலையின் 
சுக செய்தியை விடவும் 
உனைச் சுமந்தபடி 
என்னை சுமந்தவரின் 
தனிச் சிறை காண 
கையில் கிடைத்த இலை குழையுடன் 
வண்டியேறினேன்.
ஆசையாய் உனைச் சுமக்கவில்லை 
அர்த்தமுள்ள நூல்கள் படிக்கவில்லை 
வஞ்சமும் ,கொலை வெறியும் 
சூழ்ந்து நிற்க -எதிரி யார் 
நண்பன் யார் என 
பிரித்தறிதலின் வகை புரியாது
கழிந்தன பல பொழுதுகள்  
எனக்குள் நீ இருப்பதையும் -மறந்து 
"ஜான்சிராணி" தனிக்களம் புகுந்தாற்போல் 
என் கனவுப் புரவி -பலதடவை 
பாய்ந்தழித்தது  -எதிரிக் கோட்டையை!
பயணத்தின் வேகம் சட்டென நின்றிட 
போன வண்டி மாறி 
வந்த வண்டியில் ஏற்றப் பட்டேன்.
உன்னை என்னிடம் கொடுத்து 
என்னைச் சுமந்தவர் 
விடைபெற்றார் எனப் .புரிந்தது .
கண்ணீருக்குள்- நீ பிறந்தாய் 
ஆறடியில் அண்ணார்ந்து பார்க்கவைக்கும் 
என் மகனே !
உன் தாத்தாவின் 
வாழ்வின் சாயல் உனில்  தெரிய 
மீண்டும் எமைச் சுமப்பாயா ?