Sunday 23 December 2012

பல தொழில்நுட்ப புரட்சியுடன் கைக்குள் போகிறது உலகம்!


என் முதல் கைபேசி " Nokia 8110 " 
 அப்பாவின் கடைசித்   தலை மறைவு காலத்து நினைவுகள் இரவின் தூக்கத்தைக்  கெடுத்தது. கைபேசி இருந்திருந்தால் ,அவரின் தனிமைச் சிறையை கொஞ்சம் குறைத்திருக்கலாமே என்று நினைத்தேன்.  89' இன் ஆரம்பங்களில், இலங்கை தபால் சேவை மட்டுமே பல பரிமாறல்களுக்கு உதவியாக இருந்தது. தொலைத்  தொடர்பு வசதிகள் கிராமப் புறங்களில் இருக்கவில்லை.எங்கள் ஊரான சுழிபுரத்தில் ,தபால் நிலையம் தவிர   விக்டோரியா கல்லூரியின் அதிபரும்,ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளருமான ,இராஜசுந்தரம் மாஸ்டர் வீட்டிலேயே இருந்தது. அது எம் வீட்டுக்கு மிக அருகில் இருந்தது. விபத்து,மரணச் செய்திகளை அவர் வீட்டு தொலைபேசியின் பயனாலே பரிமாற்றம்  நிகழ்ந்தது.அவர் வீட்டு மணிச் சத்தம் போய் வரும் போது கேட்டு இருக்கிறேன். அதனையும் எமது தமிழ் போராளிகள் ,போராட்டத்தின் முதல் கடமையாக அதனை அறுத்து, கம்பத்தை உடைத்தனர். (அதற்க்கு முதல் சண் மாமா  (தோழர் சண்முகதாசன்) வீட்டிலே பார்த்திருக்கிறேன். அவர் கொடுத்து முகம் தெரியாத உறவுகளுடன் பேசி இருக்கிறேன்.)அதிலிருந்து 10 வருடங்களின் பின்னர் என் அண்ணா எனக்கு " Nokia 8110 " என்கிற கைபெசியத் தந்தார். அதற்குப் பெயர் " Banana ". Colour இல்லாதது. நான் 1984 இல் கம்ப்யூட்டர் கற்ற போது "விண்டோஸ்" தெரியாது. mouse , CD  டிரைவ் தெரியாது.  அட ! ஒரு 10 வருடங்களில் எவ்வளவு தொழில் நுட்பம் மாறி இருந்தது.நான் அறிந்த சில விடயங்களை உங்களுடன்...,
                                                                                                     முதல் மொபைல் தொலைபேசி அழைப்பு ஒரு ஆட்டோமொபைல் நிறுவப்பட்ட ஒரு தொலைபேசி தொகுப்பில் இருந்து ஜூன் 17,  St. Louis, Missouri on , 1946  இந்த முதல் மொபைல் தொலைபேசி அழைப்பு  Bell Labs scientists Alton Dickieson, D. Mitchell and H.I. Romnes விஞ்ஞானிகள் ALTON Dickieson, பலரினால்  மேற்பட்டு  10 ஆண்டுகள் முடிவு பெற்றது, சிலர் தொலை நெட் இனால் இணைக்கப்பட்ட முதல் கைபேசி ஸ்வீடன் நாட்டு காவல் துறையினரால் 1946ம் ஆண்டு செய்யப்பட்டது என்றும் . காவல் துறையினர் உபயோகப்படுத்தி வந்த தகவல் தொடர்பு ரேடியோவே இதன் முன்னோடி என்றும் சொல்வர்.1960 களில் சிறிது வளர்ச்சியடைந்த தொழில் நுட்பம் 1967 " நெட் வொர்க் " உட்பட்ட அழைப்புகளை மட்டும் ஏற்றுக்கொண்டது. பெல் ஆய்வுக்கூட பொறியாளர் ஆமோஸ் எட்வர்ட் என்பவர் 1970ல் தானியங்கியாக ஒரு அழைப்பு கோபுர எல்லையிலிருந்து இன்னொரு எல்லைக்கு அழைப்பு துண்டிக்காமலேயே செல்லும் ‘அழைப்பு கைமாற்ற’ தொழில் நுட்பத்தைக் கண்டுபிடித்தார். அது கைபேசி வளர்ச்சிக்கு பேருதவியாயிற்று. 1971ல் ‘ஏ.டி & டி’ நிறுவனம் கைபேசி சேவை ஒப்புதலுக்காக பெடரல் தொலை தொடர்பு குழுவிடம் விண்ணப்பித்தது. அது சுமார் பதினோரு ஆண்டுகளுக்குப் பின் 1982ல் அங்கீகரிக்கப்பட்டு தனியாக அலைவரிசை ஒதுக்கப்பட்டது.
                        இதே வேளை ஐரோப்பாவில்,  மொபைல் வானொலி சேவைகள் உருவாக்கப்பட்டன. மேற்கு ஜேர்மனியில் ஒரு நெட்வொர்க் ஒரு-Netz நாட்டின் முதல் பொது வர்த்தக மொபைல் போன் நெட்வொர்க் 1952 இல் தொடங்கப்பட்டது  1972 ஆம் ஆண்டில் இந்த தானாகவே அழைப்புகள் இணைக்கப்பட்ட இது பி Netz மூலம் இடம்பெயர்ந்து. 1966 ஆம் ஆண்டு நோர்வே கைமுறையாக கட்டுப்பாட்டில் ஓல்ட் என்ற அமைப்பை கொண்டிருந்தது.
                                                                                                                                                                                                          1958 ஆம் ஆண்டு வளர்ச்சி சோவியத்  தொடங்கியது.  "Altay" தேசிய உள்நாட்டு மொபைல் போன் சேவையை சோவியத் MRT-1327 தரத்தை அடிப்படையாக கொண்டிருந்தது. Altay அமைப்பின் முக்கிய உருவாக்குநர்கள் கம்யூனிகேஷன்ஸ் Voronezh அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் (VNIIS) மற்றும் மாநில சிறப்பு திட்ட நிறுவனம் (GSPI) இருந்தன. 1963 ல் சேவை மாஸ்கோவில் தொடங்கியது, மற்றும் 1970 ல் சோவியத் ஒன்றியம் முழுவதும் 30 நகரங்களில் வைக்கப்பட்டிருந்த. Altay அமைப்பின் பதிப்புகள் ரஷ்யா சில பகுதிகளில் ஒரு ட்ரங்கிங் கணினி பயன்பாட்டில் உள்ளது.                                                                                         
 1966 ஆம் ஆண்டு, பல்கேரியா பாக்கெட் மொபைல்,  கம்பி இணைப்பு, ஆறு வாடிக்கையாளர்கள் வரை சேவை செய்ய முடியும்.என்று சொன்னார்.

ஜான் எப் மிட்செல், [6] [7] [8] சிறிய தொடர்பு தயாரிப்புகள் மற்றும் கையடக்க மொபைல் தொலைபேசி கருவிகள் வளர்ச்சி முன்னேற்றம் ஒரு முக்கிய பங்கை 1973 ல் கூப்பர் முதலாளி, ஒரு மோட்டோரோலா தலைமை. மிட்செல் வெற்றிகரமாக மோட்டோரோலா எங்கும் பயன்படுத்த போதுமான அளவு சிறிய என்று கம்பியில்லா தொடர்பு தயாரிப்புகள் அபிவிருத்தி தள்ளப்படுகிறது மற்றும் செல்லுலார் தொலைபேசி வடிவமைப்பு பங்கேற்றனர்
 1978 இல் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டது,
Analog cellular networks - 1G 
 அமெரிக்காவில்  1978, இஸ்ற்றேளில்  1986, ஆஸ்திரேலியாவில்  1987..AMPS செல்லுலார் தொழில்நுட்பம் இருந்தது.   ஒட்டுக் கேட்கும் குறைபாடு இருந்தமையால்       "குளோனிங்" மற்றும் அதை ஆதரிக்கும் ஒரு  Frequency-division FDMA  திட்டம் மற்றும் wireless spectrum தேவையான குறிப்பிடத்தக்க அளவு பயன்படுத்தப்படும். அத்தகைய  Motorola DynaTAC Analog AMPS ் சின்னமான ஆரம்ப வணிக கை  தொலைபேசிகள் பல இறுதியாக 1990 இல் டிஜிட்டல் Analog AMPS மூலம் அகற்றி , மற்றும் AMPS சேவை 2008 பெரும்பாலான வட அமெரிக்க carriers களால் 2008 இல்

Digital cellular networks - 2G
ஐரோப்பிய சந்தையில் GSM , அமெரிக்காவில் CDMA  வகையறாக்களும் வந்தன.இச் சந்தர்ப்பத்தில் தான் Pre paid முறை அறிமுகமானது.1991 இல் பின்லாந்தில் GSM network (Radiolinja). அவை  900 MHz frequency இல் வேலை செய்தது. 1993, IBM Simon இல் பல அதிசயங்கள் கொண்டு வரப் பட்டன.calendar, address book, clock, calculator, notepad, email,என்பன.  
பெரிய size குறைவடைந்து ,நீண்ட நேரம் பாவனைக்குரிய Battery கொண்டுவரப்பட்டது. அதன் Processor இன் செயல் திறனும் அதிகரிக்கப்பட்டது.அதன் தொடர்ச்சியாக SMS வருகை.  UK இல்  3 December 1992 தொடர்ந்து பின்லாந்தில்  1993. 90' கலீல் ஆரம்பித்த SMS தொழில் நுட்பம் அதிக ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக மாறியுள்ளது. .
கைபேசிகள் மூலம் விளம்பரங்களையும் ,கட்டணம் வசூலிக்கும் முறையையும்  பின்லாந்து,சுவீடன்,நோர்வே ஆரம்பித்தது. கைபேசியில் இணைய சேவையை NTT DoCoMo 1999 இல் Japan இல் ஆரம்பித்தது .
Mobile broadband data - 3G
2002 இல்   3G networks  CDMA2000 1xEV-DO என்கிற தொழில் நுட்பம்  SK Telecom, KTF   உம South Korea இல் அறிமுகப்படுத்தப்பட்டது அதைத்    தொடர்ந்து உலகம் முழுவதும்  பரவல் அடைந்த வானொலி,தொலைக்காட்சி பதிவிறக்கங்கள் HSDPA( அதிவேக தொகுப்பு அணுகல்)  செய்ய இலகுவாகி அது  கைபேசிக்குள் வந்தது. 2010 இன் ஆரம்பத்தில் , E-readers, களுக்கான  Amazon Kindle இணைப்பை  wireless internet, மூலம் செலுத்தியது.அத்துடன்  Apple நிறுவனம் wireless internet ஐ  iPad tabletஇல் கொண்டுவந்தது.இன்று,மினி ipad , ipad air உம் வந்துவிட்டது.

Native IP networks - 4G
3G ஐ விடவும் 10 மடங்கு திறன் வாய்ந்ததாகக் கருதப்  படுகிறது.  4G தற்சமயம் WiMAX என்று  அமெரிக்காவிலும்   Scandinavia லும் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.நொடிக்கு 21 மெகாபிட்ஸ் போன்ற வேகத்தில் தரவுகளை அளிக்க வல்லதாகும்

 சேட்டிலைட் போன்
        இணைந்து பூமியை சுற்றிவரும் செயற்கைக்கோள்களின் கம்பி நெட்வொர்க்குகள்   . 1979 இல் உருவாக்கப்பட்டது .1998இல்  Iridium satellite பண முடக்கத்தால் பின்தள்ளப்பட்டாலும் ,இன்றும் தொடர்புகள் பெற்றுக்கொள்ளப்பட முடிகிறது 

 ஐந்து உலகளாவிய மொத்த மொபைல் போன் விற்பனையாளர்கள், 
1 சாம்சங் 22.7% 23.0%
2 நோக்கியா 18.0% 17.9%
3 ஆப்பிள் 9.2% 9.9%
4 ZTE 3.4% 3.6%
5 எல்ஜி 3.2% -
5 ஹவாய் - 3.3%
மற்றவை  43.5% 42.3%

1907  முதலாவது Wireless Telephone System உருவானது
1930 முதல் Motrola Brand car Radio தயாரிக்கப்பட்டது
1931 கனேடியரால் Walkie -Talkie கண்டுபிடிக்கப்பட்டது
1936 போலீசாருக்கான Police Crusier Radio Receiver உருவானது
1940 எடுத்து செல்லப்படக்கூடிய Handi -Talkie ரேடியோ
1943 முதலாவது எடுத்து செல்லக்கூடிய FM Two -Way Radio
1947  Citezen 's Band Radio , Car Radiotelephone
1947 Transistor (கொள்ளளவி) கண்டுபிடிக்கப்பட்டது
1949 Pager (beeper ) உருவாக்கப்பட்டது
1954 முதலாவது எடுத்து செல்லக்கூடிய ரேடியோ
1956 கார் மொபைல் போன் சிஸ்டம்
1958 கம்ப்யூட்டர் சிப் (IC ) உருவானது
1966 Cordless தொலைபேசி உருவானது
1972 இன்டெல் இன் முதலாவது மைக்ரோ Processor
1973  முதலாவது தொலைபேசி பாவனைக்கு வந்தது
1979  satellite போன்  உருவாக்கப்பட்டது
1983 முதலாவது எடுத்துசெல்லக்கூடிய கமெர்சியல் செல்போன்
1991 உலகின் முதலாவது GSM செலூலர் போன்
1993 SMS பயன்படுத்தப்பட்ட்டது (தற்செயல் நிகழ்வு)
1994 Bluetooth டெக்னாலஜி உருவாக்கப்படாது
1995 முதலாவது இரு வழி பேஜர் உருவானது
1998 Nokia 2110: முதலாவது Color Palm -Size PC
2000 முதலாவது GPRS செலூலர் சிஸ்டம்
2002 Blackberry5810 சந்தைக்கு வந்தது
2003 Motrolla இன் A600 செல்லுலர் போன்
2004 மைக்ரோசொப்ட் இன் முதலாவது மியூசிக் போன்
2005 Maicrosoft 3G போன்
2006 Microft Windows 5 .0 SmartphoneMotrola வின் Ming Smartphoneபோன்றன பாவனைக்கு வந்தது
2007 iPod ,TouchApple இன் iPhoneAndroid OS,Wi -MaxAmzon Kindle (Wirless Reading Device )போன்றன இவ்வாண்டு அறிமுகமாகின
2008  முதலாவது Androd Phone HTC DreamiPhone  3GiPhone இக்கான SKDஎன்பன இவ்வாண்டில் அறிமுகமாகின
2009  Nokia 900 அறிமுகமானது
2010 iPad ,IPhone 4 , BlackBerry Play Book பயன்பாட்டுக்கு வந்தது.
2012  (Huawei Ascend G330 ,HTC 8s , Samsung Ativ S, iPhone 5
2013 BlackBerry Z30, ZTE Blade V, Nokia Lumia 625,HTC One Max, Google Nexus 5) ,Iphone  5s ,5C 

எதிர் காலத்தில் இப்படியும் வசதிகளுடன் வரைருக்குதாம் ,
ஹாலோகிராம் / குறுகிய திட்ட திரைகளில் (Hologram / short projection screens)
முன்னேறிய "மிகை உண்மையில்""(augmented reality")
ஆற்றல்மிகு ப்ரொஜக்டர்( projectors)
நெகிழ்வான திரை-(Flexible screen)
விழித்திரை அல்லது கைரேகை அங்கீகாரம்-(Retina or fingerprint authentication)

 இப்படியாக  பல தொழில்நுட்ப புரட்சியுடன் கைக்குள்  போகிறது உலக ம்! 

பபி - இரவி 


Saturday 22 December 2012

அந்த ஒன்பது மாதங்கள் - உனக்கானவை !


வலி மிகுந்த நாட்களின் 
வீண் சுமையாய் -எண்ணி 
உனை சுமந்தேன்.
நல்ல சோறு இல்லை, ஆழ்ந்த  தூக்கம் இல்லை 
வறுமையும்,நம்பிக்கையீனங்களுமே 
உனக்கான உணவாய் என்னுள் இருந்தன 
பதுங்கு  குழியில் பாதி நாளும் 
பக்கத்து சுவரிலும் 
ஒற்றனின் காதோ என்று 
மீதிப் பொழுதும்
 நிமதியற்றே கழிந்தது.
கிடைத்த அரச வேலையின் 
சுக செய்தியை விடவும் 
உனைச் சுமந்தபடி 
என்னை சுமந்தவரின் 
தனிச் சிறை காண 
கையில் கிடைத்த இலை குழையுடன் 
வண்டியேறினேன்.
ஆசையாய் உனைச் சுமக்கவில்லை 
அர்த்தமுள்ள நூல்கள் படிக்கவில்லை 
வஞ்சமும் ,கொலை வெறியும் 
சூழ்ந்து நிற்க -எதிரி யார் 
நண்பன் யார் என 
பிரித்தறிதலின் வகை புரியாது
கழிந்தன பல பொழுதுகள்  
எனக்குள் நீ இருப்பதையும் -மறந்து 
"ஜான்சிராணி" தனிக்களம் புகுந்தாற்போல் 
என் கனவுப் புரவி -பலதடவை 
பாய்ந்தழித்தது  -எதிரிக் கோட்டையை!
பயணத்தின் வேகம் சட்டென நின்றிட 
போன வண்டி மாறி 
வந்த வண்டியில் ஏற்றப் பட்டேன்.
உன்னை என்னிடம் கொடுத்து 
என்னைச் சுமந்தவர் 
விடைபெற்றார் எனப் .புரிந்தது .
கண்ணீருக்குள்- நீ பிறந்தாய் 
ஆறடியில் அண்ணார்ந்து பார்க்கவைக்கும் 
என் மகனே !
உன் தாத்தாவின் 
வாழ்வின் சாயல் உனில்  தெரிய 
மீண்டும் எமைச் சுமப்பாயா ?

Tuesday 23 October 2012

இருபது வருடங்களுக்குப் பின்னர் , என் ஊரில் நான் ....(1991-2011)



2011-2-28 இரவு ரயில் ஏறி விடிகாலை கொழும்பிலிருந்து வவுனியா வந்தடைந்தோம். பதின்மூன்று வருடங்களில் நிறைய பழுதடைந்து கிடந்தது புகையிரதநிலையம். பண்டாரிக்குளம் , குருமன்காடு ,வேபன்குளம் வந்தடைந்தோம்.அந்த ரோடு பற்றி சொல்ல ஒரு ஜென்மம் வேண்டும்.மதியம் ஒரு மணி அளவில் ஒரு சிறிய வேனில் புறபட்டோம்.சிதைவுகள் குறைந்த மண் ரோடு புழுதியை கிளப்பிய படி பயணம் தொடர்ந்தது.ஓமந்தை வந்தபோது இருபது வருடங்களுக்கு முன்னர் இடம்பெயர்ந்து வந்தது நினைவு வந்தது ,சுபாக்கு இரண்டு வயசு, சுமனுக்கு ஒரு வயசு. இராணுவத்துக்கு நாம் சளைத்தவர்கள் அல்ல என்ற குணத்துடன் புலிகளின் அடாவடி தனத்தின் உச்சம் அங்கு நடந்தது.குழந்தைகள் அதிகம் சிரமபட்டினம் .வவுனியா வர்த்தகர்கள் மணெண்ணை வியாபாரத்தில் கொடிகட்டி பறந்த நேரம் அது.பின் நாளில்  ஓமந்தை முகாம் விழுந்த காலத்தில் நாங்கள் வவுனியா வில் இருந்தோம்.ஜோசப் முமுகாமுக்கும் , இதுக்கும் நடந்த உச்ச சண்டையை நேரில் பார்த்தோம்.இந்த இடம் இபோதும் நெருக்கடி மிகுந்த இடமாகவே இருக்கிறது. சோதனைசாவடி,வழமையான சோதனைகள் முடித்து புழு ரோடு ,தார் ரோடு மாறி மாறி பயணம் தொடர்ந்தது. பாரிய சேதங்கள் ,இடிந்த வீடுகள் என்று எதையும் என்னால் பார்க்க முடியவில்லை. எல்லாம் வெளி ஆக இருந்தது. ரோடு அகலபடுதுவதற்காக சீன அரசாங்கம் வாகனகளையும் , சிறய குடில்களையும் போட் டு இருந்தனர்.
A'9
    A9 ரோட்டில் ,விடுதளைபுலிகளாலும் ,அரசாங்கத்க்தினாலும் தேடப்பட்ட ஒரு போராளியுடன்  பயணம் செய்வேன் என்று கனவில் கூட நினைத்தது இல்லை.புளியங்குளம்  வந்தடைதோம். நேரம் மூன்று. சிறிய சிலகடைகள் அதோடு ஆர்மிகடைகளும் இருந்தன. சிங்கள மக்கள் சிறிய வாகனகளில் யாழ்ப்பாணம் நோக்கி போய் வந்துகொண்டிருந்தினம். ஒரு சில கார்கள் கூட புழுதியால் நிறமாறி பயணம் செய்தது. இராணுவ முகாம்கள் பனை ஓலையால் அழகாக அடைக்கப்பட்டு இருந்தது.முருகண்டியை அடைந்த போது நான்கு மணி. பிளையாரில்  எந்த மாறுதலும் இல்லை.அப்பா கடைசியாக கொழும்பு  இலிருந்து வந்த போது அந்த முருகண்டி பிள்ளையார் முன்பாகக  என்னையும் மீறி அழுதேன். எனக்கு அது நல்ல நினைவு இருக்கு. அப்பா சிரித்தார். மரணத்தில் கூட மரணசடங்கை மறுத்த அப்பாவுக்காக சாமி கும்பிடேன். அதுதான் கடைசி தடவை .'டேஸ்ட்' என்ற ஒரு உணவு விடுதி புத்தரும், பிள்ளையாரும் ஒன்றாக இருந்தினம். அது சிங்கள விடுதி. உணவு நன்றாக  இருந்தது. கிரிகெட் பார்த்தபடி மக்கள் உணவருதினார்கள். கழிப்பிடம் நன்றாக இருந்தது. அந்த ஓரில் இது அவசியமாக பட்டது. இதில் கூட அரசியல்வாதிகள் தலையிடதாக அறிந்தேன். 
Murukandi Pillaiyar


முருகண்டி பிள்ளையார் இன்னும் ஓலை குடிசைக்குள் இருக்கும் காரணம் எனக்கு புரியவில்லை.என்னுடன் வந்த சகோதரன் முருகண்டியானை கும்பிடாவிட்டால் வயித்து வலி வரும் என்று பயமுறுத்தினார் . பிள்ளையார் என்னை சோதிக்கவில்லை. கிளிநொச்சியை அடையும் போது ஐந்து மணி தாண்டி இருந்தது. மிகவும் கவலையான விஷயம் பாரிய தண்ணீர் தொட்டி சரிந்து கிடந்தது.கிளிநொச்சியை கைவிட நேரம் புலிகள் அதனை குண்டு வைத்து தகர்த்ததாக அறிந்தேன்.

கிளிநொச்சி நகரம் நவீன பாவனை பொருட்களுடன் ,புதுபிக்கப்பட்ட , புத்தருடனும் அவசர நகரமாக இருந்தது. புலிகளின் பெண்போராளியின் சிலை உடைக்கபட்டு இருந்தது. பெரிய சேதங்களை பார்க்க முடிந்தது. குண்டு துழைத்த கட்டிடங்கள் ,ஜனநாடமாடம் குறைந்த நகரம் ஆக இருந்தது.பரந்தனும் கிளிநொச்சியை ஒத்ததாகவே இருந்தது. 
elephant pass 
Water tank Kilinochi
ஆனையிறவு முகாம். என் அண்ணாவுக்காக அப்பா கையெழுத்து போட்ட இடம்.புவியல் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பிரசித்தி பெற்ற இடம். யாழ்ப்பாணத்தை தனிமை படுத்தும் குடா. அங்கு ஒரு இராணுவ பீரங்கி வண்டி ,அதனை வணங்கியபடி மாலைகளுடன் நின்றது.பக்கத்தில் ஒரு இராணுவவீரன் படம். அந்த வீரனால் தான் முகாம் காப்பாற்றபடதாக வரலாற்று தகவலும் இருந்தது. இலங்கையை பல கைகள் சேர்ந்து தங்குவது போல ஒரு சிலை. அழகாவும், ஒப்ரவாகவும் செய்திருந்தார்கள் .அங்கும் வண்டி சோதனை, அடையலாட்டை சோதனை நடந்தது.

xஇயக்கச்சி அடையும் போது ரோடு பார்பதுக்கு சீராக இருந்தாலும் ,வாகனம் துள்ளி துள்ளி பறந்தது.அது பற்றி சிங்கள மொழியில் மாத்திரம் இராணுவம் குறிப்பிடு இருந்தார்கள். பல விபத்து நடந்ததாக அறிந்தேன். பளை தென்னந்த்தோட்டம்  எல்லாம் செழிப்பாக இருந்தாது. வீடுகள் பல காலியாக இருந்திச்சு .தொடர்ந்து சாவகசேரிலும் இதே நிலைமை தான் .உடைந்த பல வீடுகள் ,பல வீடுகளில் இராணுவம் இருந்தார்கள். சில வீடுகள் விடுதியாக மாறி இருந்தது.தொடர்ந்து காலியான வீடுகள் அதுவும் உடைந்து இருந்தது.நான் செல்லவேண்டிய இடம் கச்சேரி என்றாலும் யாழ்பாணத்தை முதலில் பார்க்கவேணும் என்று நினைத்தேன் 
.யாழ்பானக்கோட்டை ,சுப்பிரமணியம் பார்க் ,நூல்நிலையம் ,வீரசிங்க மண்டபம். ரிம்மர் ஹால் ( அப்பாவின் ,செந்தில் மாமாவின் பல பேச்சுகளை கேட்ட மண்டபம்.) பக்கத்தில் சென்ட்ரல் காலேஜ் மைதானம் நான்  100 mtr, 200mtr இல் முதலிடம் வாங்கும் இடம்.எதிலும் மாற்றம் இல்லை. ஆனால் சன நடமாட்டம் மிக குறைவாக இருந்தது. பெரிய ஆசுபத்திரி , பூபாலசிங்கம் புத்தகக்கடை ,பஸ் நிலையம் வழமை போல கலகலப்பா இருந்தது.சுபாஸ் கபே மூடி இருந்தது. அப்படியே திரும்பவும் பழைய கச்சேரி அரச விடுதிக்குள் வந்தோம். என் மகளின் உற்ற நண்பி தான் அம்மாவின் அரச அதிபர் விடுதியில்  தங்கும் படி கேட்டுகொண்டார் .என்னோடை மூன்றாம் வகுப்பில் இருந்து சாரனீயத்தில்  இருந்த போது,வருடத்தில் , 2 நாட்கள் தங்கி இருந்து பயிற்சி செய்வோம் .அந்த நினைவு வந்தது. எதிரில் கச்சேரி என் அம்மா வேலை விசயமாக வரும்போது எனையும் கூடி வருவார். அதற்கு பக்கத்தில் இருந்த ymca கடையில் தான் அண்ணா முதல் முதல் fanta soda  வாங்கி தந்தார்.  அதோடு என்னுடைய நண்பர்கள் வீடும், நான் படித்த இடமும் அருகு அருகே இருந்தது. சுண்டிக்குளி ரோட்ல வரும் போது நான்  படித்த காலம் நினைவு வந்தது. .

அன்பான உபசரிப்பு, நல்ல உணவு ,சுற்றி வர 17 காவலர்கள். தூக்கம் சீக்கிரம் வர மறுத்தது.அதிகாலை காலை உணவுடன் தர்மினியின் அம்மா கொடுத்த வாகனதுடனும் சாரதியுடனும் முதன் முதல் நான் பார்த்தது என் பள்ளி தோழியை .அவர் பெரிய ஆசுபத்திரியில் இரத்த பரிசோதகராக இருக்கிறார்.20 வருடங்களுக்கு முன்னர் எப்படி பார்த்தேனோ அபபடியே  இருந்தார். சந்தோசத்துக்கு அளவு இல்லை. பின்னர் எதிரில் இருந்த Bank Of Ceylon சிறிது பணம் எடுத்துக்கொண்டு பூபாலசிங்கம் புத்தகசாலை, புது மார்க்கெட், கஸ்துரியார் வீதிவழியாக வின்சர் தியேட்டர், லிடோ தியேட்டர் ஐ காணவில்லை. ராஜா தியேட்டர் ல காவலன் படம் ஓடியது. நல்லூரில் அம்மாவின் பயிற்சி கல்லூரி, கந்தசாமி கோவில் உதயன் பத்திரிகை அலுவலகம் ,மனோகரா தியேட்டரில் நடுநிசிநாய்கள் ஓடியது , ஓடுமடம் , கல்லுண்டாய் வழியாக போனோம். கல்லுண்டாய் பாலம் நான் பார்த்தது போலவே இருந்தது. இடையில் அது உடைந்து திருத்தியதாக அறிந்தேன். நான் படித்த Jaffna College Tech ஐய் பார்த்தபோது மகிழ்வுக்கு அளவில்லை. முதலில் பார்த்தது மைதானம் . 2 வருடமும் cup வாங்கினேன். office, Library  போனேன். Auditorium  பூடி இருந்தது. மோகன் அண்ணா ,தான் தான் நடிகர்  மோகன் என்ற நினைவில் guitar வாசித்தபடி பாடுவது நினைவு வந்தது. பக்கத்தில் என் class. அந்த chair இப்பவும் இருந்தது.Computer Lab ஐ பார்க்க முடியவில்லை. நான் computer science படிக்கச் சேர்ந்த காலத்தில் தான் PLOTE இயக்கத்தினர் computer களை கொள்ளை அடித்தனர். அப்போது என் அண்ணாவும் அந்த அமைப்பில் இருந்தார். அதில் என்ன பகிடி என்றால் Monitor ஐ மாத்திரம் எடுத்துவிட்டு CPU ஐ விட்டுச் சென்றனர். அவர்களுக்கு தெளிவு இருக்கவில்லை. இதுபற்றி என் வகுப்பு நண்பர்கள் கலாய்க்கும் போது மனதில் PLOTE ஐ திட்டியபடி இருப்பேன் . என் பஸ் நிலையம் உடைந்து உருக்குலைந்து இருந்தது.வீடுக்கு போக மனம் இன்றி இருந்த இடம் இப்படி ஆகிற்றே என்று வருந்தினேன். என் நண்பர்களும் உதவினால் அதை  இப்போதும் சீரமைக்கலாம். 

Library and Computer LAb

Ground

Vaddukoddai Bus stan
சித்தன்கேர்னி சந்தி ,அனேகமாக நான் அந்த சந்தியில் இருந்து தான் அடுத்த பஸ் எடுப்பேன்.அதனூடாக நான் படித்த பண்டதெருப்பு Girl High School குப் போனேன். நான் ஆடிப் பாடிய ஹால் உடைந்து சீரழிந்து கிடந்தது. வழமையாக நாங்கள் பாவித்த அந்த இரும்பு Gate அடைக்கப்பட்டு இருந்தது. நான் விளையாடிய புளியமரம் , அலறிமரம் எல்லாம் இல்லை. நான் பாடசாலையை  விட்டு விலகிய காலத்தில் கட்டிய கட்டிடம் முன்னுக்கு இருந்தது. 5 வகுப்பு Scholarship சித்தி அடைந்த பின்பு Hostel ல தங்கி இருந்து 2 வருடங்கள் படித்தேன். 'லூசி அக்கா 'தான் எல்லாவற்றுக்கும் பொறுப்பாக இருந்தார். வயசில் குறைந்த மாணவி நான் தான் என்பதால் என்னுடன் எல்லாரும் அன்பாக இருந்தார்கள். அப்பா,அம்மா, அண்ணா, தம்பி வாரம் ஒருமுறை வந்து விடுவார்கள். இடையில் அண்ணாவும், அப்பாவும் நேரம் கிடைக்கும் போது எல்லாம் வருவார்கள். என் ஆன்டி எனக்கு இடியப்பமும் முட்டைபோரியலும் Seminar வரும்போது எல்லாம் கொண்டு வருவார். Hostel புது பொலிவுடன்   ஓய்வு விடுதியாக இருந்தது. மைதானத்துக்கு நடுவில் இருந்த Stage இல்லை. 5 வகுப்பு கட்டிடம் இல்லை. நன்றாக படிக்கும் மாணவியாகவும், ஓட்ட வீராங்கனையாகவும்  அடையாளம் காட்டிய 2 விசயங்களும் இப்போ இல்லை. என்காலத்தில் படித்த இருவர் ஆசிரியர்களாக இருந்தார்கள்.உதவி அதிபராக இருந்தவர் என் நண்பியின்  என் அக்கா. அதிபரை பார்க்க முடியவில்லை.எனக்கு வடையும் சோடாவும் தந்தார்கள். 

Pandatheruppu GIRLs High School.

School Ground .
பாடசாலையிலிருந்து அரசடி வீதி வழியாக என் கணவரின் வீடு , பனிப்புலம் அம்மன் கோவில் ,இந்த ஊரில் நாம் சிறிது காலம் வாழ்ந்தோம். JVP பிரச்னை நேரம் பொலிசாரின் பலதொந்தரவுக்கு எங்கள் குடும்பம் ஆளாகியது. ஒரு சமயம் எங்கள் வீட்டை போலீசார் சூழ்ந்துகொண்ட சமயம் அப்பா வீட்டில் இருந்தார். முள்ளு வேலியைப்  பாய்ந்து ஓடிய அப்பாவை ,அந்த ஊரில் வயசான பெண்மணி ஆனா பெரியம்மா தன் கொக்கச்சத்தகதினால் வேலியை அறுதுக்காபாற்றினார்.எங்கள் சிறுவயசு நண்பர்கள், உறவு எல்லாம் இந்த ஊரில் இருந்து தான் ஆரம்பித்தது. பின்னர் நானும் இந்த ஊரிலேயே திருமணம் செய்துகொண்டேன். பகவதி அக்கா வீடு சென்றேன். அங்கு மதிய உணவு அருந்திய பின்பு சுழிபுரம் வந்தடைந்தோம். என் அம்மாவின் வீடுக்கு சென்றேன் . பாழடைந்த மாளிகை போல இருந்தது. கடதாசி பூ மரமும், காய்த்து சொரிந்த நாவல் மரமும் இல்லை. தாத்தாவும், ஆச்சியும் மனசில் வந்து போச்சினம். ஹரன், கிருபா ,சுதாவை பார்க்க போய் gate இல ஆடிய நாட்களும் வந்து போனது.பக்கத்தில் சின்ன  அண்ணாவும், பெரியம்மாவும் இருந்தினம். சின்னக்க இருக்கவில்லை. பத்ரகாளிகொவில் போகாமல் 'சத்தியமனை'க்கு போனேன்.

Pakavathy Akka

Amma's House
 அண்மையில் தான் அப்பாவின் விடைபெறுகிறேன் ஒளிநாடா பார்த்தேன். மெயின் ரோடிலிருந்து சிவப்புகொடிகள் கட்டிய தெரு வெளிச்சுபோய் இருந்தது. ராஜசுந்தரம் மாஸ்டர் வீடு ஒளி இழந்து இருந்தது .ஒழுங்கையில் யாரும் இல்லை. வீடடியில் வாகனம் நின்றதும் கனகம் ஓடி வந்தார். என் அப்பாவை, என் அண்ணாவை, ஏன் ? என் உறவுகளையெல்லாம் அவளில் பார்த்தேன். வெடித்து அழுதேன்.எனக்காக, என் குழந்தைகளுக்காக அவள் வாழ்ந்தது எனக்கு நன்றாக தெரியும். அதை என் சத்தியமனையில் பார்த்தேன். Fridge குள்ளே வைத்து  எடுத்தது போல  குளிர்மையாக அழகாக இருந்தது. அந்த அழகை நான் சுப்பிரமணியம் பூங்காவில் கூட பார்கவில்லை. கடவுள் நம்பிக்கையும் மூடனம்பிகைகளும் அற்ற என் அப்பா ,என் அம்மாவின் ஆசைக்காக நட்ட துளசி செடி செழித்து வளர்ந்திருந்தது . வாழை, தென்னை, ஜம்பு , மா,வேம்பு, விளாதி ,எலும்பிச்சை எல்லாம் குளிர்மையாக காய்த்து தொங்கியது.
  எங்கள் மாமா தான் அந்த நிலத்தை வாங்கி தந்தார். முள்ளுச்செடிகளும் பத்தையுமாக  இருந்தது . அப்பா, அம்மா, அண்ணா, தம்பி சேர்ந்து தான் "சத்தியமனை" ஆனது. முதலில் கட்டியது கழிப்பிடம். நான் அபோது 5 வகுப்பு படித்தேன். முதலில் சிறிய குடிசை வீட்டில் ஆரம்பித்து சிறிது சிறிதாக கட்ட தொடங்கினோம். வீட்டுக்கு என்ன  பெயர் வைப்பது என்ற போது அண்ணா தான் "சத்தியமனை" யை தெரிவு செய்தார். அப்போது அது ஒரு குடிசை. உண்மை வாழவேண்டும் என்று அப்பா வாழ்ந்தார். ஒரு கம்யூனிஸ்ட் தன் குடும்பத்தை எப்படி அமைக்கவேனும், நாட்டை எப்படி நேசிக்க வேணும் ,மக்களை எப்படி உணர வைக்கவேணும் என்பதுக்கு உதாரணமாக  அப்பா வாழ்ந்தார். வறுமையிலும் செம்மையாக இருந்தார். சத்தியமாக வாழ்ந்தார். அவருடைய நூல் நிலையம் , ஒழுங்காக அடுக்கப்பட்டு இருந்தது. 50 ம் ஆண்டிலிருந்து தேவையான பத்திரிகைகளின் சேகரிப்பு இருந்தது. அவரின் சில டயரிகள் இருந்தன. எங்கள் மாமாவின் ஓர் டையரியும் இருந்தது. எங்கள் அப்பா, அம்மாவின் திருமணம் பற்றி குறிப்பிடு இருந்தார். நாங்கள் 3 பேரும் அடிகடி விழுந்து எழும்புவோம். எப்போதும் முதலுதவி பெட்டி இருக்கும். அதைகூட அப்பா தான் உருவாக்கினார். அவர் ரசித்து சேகரித்த பொருட்கள் பெரும்பாலும் அப்படியே இருந்தது. அவர் படுத்த கட்டில் , Fan பார்த்து திரும்பவும் அழுதேன். என்னால் எதை மறக்க முடியும் ? அப்பாவை நேசித்த , அவரின் கொள்கைகளை புரிந்துகொண்ட ஒருவருடன் வாழும் வாழ்கை எனக்கு கிடைத்து. அப்பாவையும், "சத்தியமனை"யும் மீறி ஒரு செக்கனும் என்னால் வாழமுடியவில்லை. அதனால் தான் என் குழந்தைகளையும் என்னால் சரியாக வளர்க முடிந்தது. எங்கள் அம்மா சொல்லுவா , உப்புச் சிரட்டையும்  நாங்கள் தான் வாங்கி வாழதொடங்கினோம் என்று. எந்த வழியிலும் உதவி கிடைக்கவில்லை. காதல் திருமணம்,கலப்பு திருமணமும் கூட. அப்பா தன்னுடைய வேலையை விட்டு விலகி முழுநேர கட்சி வேலையில் ஈடுபட்டார். அம்மாவின் ஆசிரிய வேலை தான் எல்லாவற்றுக்கும் உதவியது. அம்மாவின் வேலை மாற்றம் காரணமாக பல வீடுகள் வாடகைக்கு இருந்தோம். அப்பாவின் அரசியல் வாழ்க்கையினால் அடிக்கடி போலீஸ் தேடி வந்தது. வீடு வாடகைக்கு எடுப்பதும் கஷ்டமாக இருந்த சூழலில் தான் "சத்தியமனை" அமைந்தது. சண்முகதாசன் மாமா முதல் பல கட்சி தோழர்கள் வந்து போன இடம். எங்கள் வீடுக்கு கடைசியாக வந்தவர் வி .எ .கந்தசாமி மாமா . அப்பா சில அரசியல் பிரச்சனையால் சிக்கலில் இருந்த சமயம் வந்து அப்பாவின் கைகளை பிடித்து அழுதது ,பினர் நாங்களும் அழுதது இன்றும் நினைவு இருக்கு. ஆனால் அப்பா அவரின் உதவியை மறுத்துவிட்டார். 
ஒரு பெட்டியினுள் பல கடிதங்கள் இருந்தன. அதில் டானியல் மாமா அப்பாவிற்கு எழுதிய கடிதங்கள். தன்னுடைய நிலத்தில் உள்ள  கட்சியின் புத்தக நிலையத்தை அகற்றுமாறு எழுதியது. பின்னர் அது பெரிய பிரச்சனையாகி , புத்தகங்கள் எல்லாம் வெள்ளத்தில் வீசிகிடந்தன.இப்படி பல கடிதங்கள் எடுத்து வந்தேன். அதில் எனக்காக அப்பா எழுதியது சிலதும் ... 

"Sathiamanai" Appa's Letter
பல கடிதங்கள், கட்டுரைகள் , அவரின் டயரிகள் ,புகைப்படங்கள் என்று நிறைய சேகரிப்புகள் கிடைத்தன.அவருடைய தீர்கதரிசனமான எழுத்துகள் வியப்பில் ஆழ்த்தின.இதே போல அண்ணா சிறையில்  இருந்து அனுப்பிய கடிதங்கள் ,பின்னர் PLOTE அமைப்பிலிருந்து விலகிய பின்பு எழுதிய காரணங்களும், கடிதங்களும் இருந்தன.இவற்றை பார்த்துகொண்டு இருந்தபோது பேபி அக்கா, சின்னக்கா தன் இரு பெண் பிள்ளைகளுடன் வந்தார்.திரும்பவும் கண்ணீர், பல கதிகள், நல விசாரிப்புகள் ,தழுவல்கள் அந்த அன்புக்கு ஈடுஇணை இல்லை. அந்த நேரம் நல்லை அண்ணாவும் வந்தார். அண்ணாவின் நண்பர் என்பதுடன் , இவர் ஒரு ஆரம்பகாலம் தொட்டு  ஓர் விசுவாசம் மிக்க போராளி. போராட்டத்தின்  ஒரு பகுதியாக அவர் வெளிநாட்டில்  சிறை இருந்த போது அப்பா அவருக்கு புத்தங்கள் அனுப்புவதை தவறாமல் செய்து வந்தார். அத்துடன் , திருமணத்தில் இருந்த சாதி முரண்பாடுகளால் அப்பாவுடன் தொடர்புகளை  துண்டித்த அப்பாவின் குடும்பம் ,அவரின் தந்தையின்  மரண நினைவு நூலில் கூட அவரின் பெயரை போடவில்லை. தாயின் மீது மிக அன்பு கொண்ட அப்பா ,அவவின் மரண வீடுக்கு நல்லை அண்ணையுடன் தான் சென்று வந்தார். 1986 august இல் நல்லை அண்ணை கடைசியாக எங்கள் சத்தியமனை இல் பார்த்தேன்.அவர் முள்ளிக்குளம் போவதாக சொல்லி  சென்றார். பின்னர் 1994 இல் என் தம்பியுடன் மகர சிறையில்  பார்த்தேன். 
                                   "சத்தியமனை " இல் சந்தோசங்கள், கவலைகள், கண்ணீர், இரத்தம், பெருமைகள் ,சாதனைகள் எல்லாம் பார்த்த வீடு. அண்ணா 9 ஆம் வகுப்பு படிக்கும் போது சிறுபொறி என்று ஓர் கையெழுத்து பத்திரிகை நடாத்தினார். அதற்காக ஒரு சிறு காரியாலயம் கட்டினோம். உண்டியல் நிதி சேகரித்து தொழிலாளி பத்திரிகைக்கு, " செம்பதாகை " கொடுப்போம் . வீட்டை சுத்தி மேதின ஊர்வலம் போவோம், ரவி அண்ணா, தேவர் அண்ணா, சந்திரன் அண்ணா உட்பட எங்கள் அப்பாவும் ,அம்மாவும் அந்த ஊர்வலத்தில் கலந்துகொள்வார்கள். என் தம்பி நன்றாக பேசுவான். அவனது மேடை கிணறுகட்டு தான். அண்ணா ஒவொரு  நாள் காலையிலும் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைக்க வேண்டும் . பினர் தம்பியுடன் சேர்ந்து பாத்தி அமைக்க வேண்டும். 

"Sathiamanai" To amma

1989 later part, this is the last pic of Appa.

Parent's wedding on 1962 Jan
அதிகாலையில் இருந்து அண்ணா சும்மா இருப்பதில்லை. அதிகம் அடியும் அவன்தான் வாங்குவான். ஆனால் எப்போதும் தான் தான் முதல்வன் என்ற அதிகாரத்தை என் மீதும் தம்பி மீதும் காட்டதவறுவதில்லை. அதே நேரம் நாம் அழுதால் உடனே இரங்கும் பண்பும்,கட்டியணைக்கும்  குணமும் தாரளமாக இருந்தது. என்று அண்ணா எங்ககூட இல்லை. 1984 dec இல் அண்ணா கைது செய்யப் பட்டார். வானொலி மூலமாக கேட்டு  அறிந்துகொண்டோம். 64 மணிநீர ஊரடங்கு உத்தரவும் ,வட்டுகோட்டை தொகுதியை இராணுவம் சுற்றி வளைத்ததும் சீக்கிரத்தில் மறக்க முடியாத நிகழ்வு . அன்று இரவும் ,அதைதொடர்ந்து நாங்கள் வாழ்ந்த வாழ்வு கண்ணீரின் உச்சம். குருநகர் முகாம், யாழ்ப்பான கோட்டை, பலாலி இராணுவ முகாம், என்று நாங்கள் அலைந்தது கொஞ்ச நஞ்சமில்லை. பின்னர் பூசா , வெலிகட என்று இருந்து ராஜீவ் காந்தி இன் ஒப்ந்த்ததுடன் விடுதலையாகி ,சிங்கபூர் சென்று, பினர் நோர்வே நாட்டுக்கு சென்றார். சிலகாலத்தின் பின் இந்தியா வந்தார். அங்கு ஏற்பட்ட ஒரு விபத்தில் அகாலமரணம் ஆனார். பல போராடங்களாலும் ,பொலிசாரின் அடிகளாலும் அப்பா சீக்கிரம் நோயாளி ஆகிபோனார். அத்துடன் தன் கொள்கைக்கு மாறாக இருந்த அண்ணாவை சென்று பார்க்க விரும்பவும் இல்லை. ஆனால் தன் மூத்த மகனின் பிரிவும அவரை தாக்கியது. தம்பி பாடசாலை மாணவன் . அந்த நேரம் பெண்பிள்ளைகள் விடுதலை போராட்டத்தில் அதிகம் பங்கு கொள்ளவில்லை. அதனால் என் மீது இராணுவத்திற்கு  சந்தேகம் வரவில்லை.அதனால் நானும் அம்மாவும் தான் ஒவொரு கிழமையும் அண்ணாவைப் பார்க்க போய் வருவோம் .என் 19 வயசிலிருந்து 

Anna and Me

Anna's letter

தொடர்ந்து நான்கு வருடங்கள் அண்ணாவை சென்று பார்த்து வந்தேன். அந்த காலத்தில் தான் , என்னை நான் புரிந்துகொள்ளவும், சில தெளிவான முடிவுகளை எடுக்கும் தைரியமும் எனக்கு வந்தது.பொறுப்புள்ள பிள்ளையாக நடந்துகொள்ள ஆரம்பித்தேன். அந்த வயசில் என்னை நானே மாற்றி கொண்டது பற்றி இப்போ என் குழந்தைகளுக்கு சொல்வதுண்டு. நிறைய எழுதுவேன், கவிதைகள் கூட எழுதினேன். என் அண்ணாவின் பிரிவு என்னை, என் தம்பியை நெறைய பாதித்தது. அப்பாவின் உடல்நிலை , வறுமை எல்லாம் சேர்ந்து தம்பி வெளிநாடு செல்ல முடிவு எடுத்தான். நன்றாக படிக்க கூடிய தம்பியின் இந்த முடிவு பற்றி எல்லாருக்கும் கவலை. அவன் அதில் பிடிவாதமாக இருந்தான். இந்த கால பகுதி மிகவும் கொடுமையானது. இவை  எல்லாம் சேர்ந்து தான் நாங்கள்  பிழையானவர்களாக வாழக்கூடாது என்பதில் தீர்மானமாக இருந்தோம். வெளிநாட்டு பிரயாணம் சரிவரவில்லை. கிட்டத்தட்ட 7 மாதங்களின் பின்னர் தம்பி மீண்டு படிக்க ஆரம்பித்தார். அவரை J/hindu hostel இல் சேர்த்தோம். அவர் நன்றாக படித்து மகாபொல புலமைபரிசில் பெற்று பேராதனை பொறியியல் பீடத்துக்கு தெரிவு ஆனார். எனக்கும் திருமணம் செய்ய பெற்றோர் முடிவு எடுத்தனர். "சத்தியமனை"இல் திருமணம் முருகையன் மாமா தலைமையில் நடந்தது. அண்ணா திருமண வாழ்த்து சிறையில் இருந்தபடி அனுப்பினார். சுபரா பிறந்தார். Su Ba Ra என்று அப்பாவின் பெயர் ,எனதும், என் கணவரதும் முதல் எழுத்துக்களை சேர்த்து அந்த பெயரை வைத்தோம். எங்கள் அப்பாவின் சந்தோசத்துக்கு அளவு இல்லை. அவளுடன் இருக்கும் போது மாத்திரம் ,தன்னுடைய வருத்தங்களையும், அரசியல் முரண்பாடுகளையும்  மறந்து சிரித்து விளையாடினார். தினமும் அதிகாலையில் torch light ஐ சுவரில் அடித்து அசைத்தபடி நிலா பாட்டு பாடுவார். பின்னர் ஒரு தடவை அவருக்கு சுயநினைவு இழந்த போது தம்பி அதை நினைவூட்டி அவரை பழைய நிலைக்கு கொண்டு வந்தான். ஆரம்பத்தில்" தொழிலாளி" பத்திரிகை என்று இருந்தது பின்னர் 1978 பிரிவின் பின்னர்" செம்பதாகை "ஆகி , பின்னர் "புதியபூமி" ஆனது. பெயர் மாற்றம் வேண்டும் என்பதில் அப்பா அதிக சிரத்தை எடுத்தார். பத்திரிகை என்பது மக்களிடம் சேர வேண்டும் என்பதில் முனைப்பாக இருந்தார், அதனை கட்சி தோழர்களும் ஏற்றுகொண்டார்கள். விடிகாலையில்  எழுந்து "தாயகம்" ஆசிரிய தலையங்கம், மற்றும், பத்திரிகையின் ஆசிரிய தலையங்கம் ,செய்திகள் என்பதை எழுதுவதை வழக்கமாக்கி கொண்டார். அவர் தன் மரணம் வரை அதைத் தொடர்ந்தார். காலையில் எழும்புவது  பற்றி ஓர் கடிதம் கூட  எழுதி  இருந்தார். 

"sathiamanai"

"sathiamanai€" Su Ba Ra
One year old.

Father and daughter
பின்னர் நடந்த சில அரசியல் முரண்பாடுகளால் அப்பா யாழ்பாணத்தை விட்டு  செல்லவேண்டிய  நிலைமை ஏற்பட்டது. அது பற்றி பிறிதொரு சந்தர்பத்தில் சொல்லாம். அது பெரிய நிகழ்வு. அப்பா கடைசியாக "சத்தியமனை" ஐ விட்டு வெளியேறிய நாள் மறக்க முடியாத நாள். எனக்கு ஒரு குழந்தை இருக்கு என்றோ, எதுவுமே என்மனசில் இல்லை. அப்பா, அப்பா ...இது ஒன்றுதான் எனக்குள் இருந்தது. இந்த தேசத்துக்காக அப்பா இழந்தது அதிகம். இறுதியில் உயிரை கூட கேள்வியாகியபோது தாங்க முடியவில்லை. என்ன தவறு செய்து தான் பிறந்த மண்ணை விட்டு விலக வேண்டும்?அப்பா போவதற்கு சம்மதிக்கவில்லை. .இதனை நான் அழுதுகொண்டு type செய்கிறேன். தொடர்ந்து type பண்ண முடியவில்லை. .....!தலைமறைவாகி சிறுது காலம் வேறு வீட்டில்  வசித்து, பின்னர் கண்டிக்கு சென்றார்.உயிர் பிரிந்த பின்னர் தான் அப்பா மீண்டும் "சத்தியமனை" க்கு வந்தார். தன்னுடைய விடைபெறுகிறேன் நாளை எப்படி அரசியல் படுத்தவேண்டும் என்பதை தன்னுடைய தோழர்களுடன் பேசி இருந்தார். தன்னுடைய புகைபடத்தில் இருந்து எல்லாம் அவர் தீர்மானித்து வைத்திருந்தார்.

. "சத்தியமனையின் ஒவ்வொரு  மரங்களுக்கும் பக்கத்தில் போய் நின்று கதைகள் கேட்டேன் .ஒவ்வொன்றுக்கும்  ஒரு சரித்திரம் உண்டு. திடீர் என்று ஒரு நாள் தம்பி மரங்கள் நாட்டும் விழா கொண்டாடினான். அப்பாக்கு எபோதும் experiment பிடிக்கும். பல பூச்செடிகளை ஒட்டு முறையில் உருவாக்குவார். அதே போல விளாத்தி  மரத்தில் தோடை மரத்தை ஓட்ட எடுத்த முயற்சி பலமுறை தோல்வி கண்டது. அது இப்போது பெரிதாக வளர்ந்து காய்த்திருந்தது .அங்கு ஒரு நாயை பார்த்தேன். அப்பா வளர்த்த "கிட்டு" நினைவுக்கு வந்தது. கிட்டு அரசியலுக்கு வரமுதலே எங்கள் கிட்டு எங்களிடம் வந்தது. 5 நாட்கள் குட்டியாக கண்களை மூடியபடி வீடுக்கு வந்தது.நாங்கள் எல்லாரும் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. பிரதானமாக அம்மா. 3 குட்டிகளை பார்க்க முடியவில்லை இது வேறையா? என்று கவலைபட்டார். அதுவும் நாள் ஒரு மேனியும் பொழுது ஒரு வண்ணமுமாக வளர்ந்தது. எல்லாரின் அன்பையும் பெற்றுக்கொள்ள ஆரம்பித்தது. எங்கள் வீடில் செல்லபிள்ளை அதுதான். ஒரு கட்டத்தில் ,எங்கள் அயலுக்கும் செல்லப்பிள்ளை ஆகிவிட்டார். இது எங்கள் அயல்
வீட்டு நாய்க்கு பிடிக்கவில்லை. அடிக்கடி கிட்டுவுடன் சண்டை போட ஆரம்பித்தது.அப்பாவும் ,அகிலனும் தான் போய் வழக்கு தீர்த்து கிட்டுவை கூட்டி வருவார்கள். இதனால் அந்த நாய் அப்பாவை பலதடவை பழிதீர்த்தது. இடது காலில் தொடர்ந்து நான்கு தடவைகள் கடித்தது. இதனால் அப்பா நிறைய சிரமப் பட்டார். மூளாய் hospital க்கு தான் உடனடியாக அழைத்து போவோம். இதனால் கோவப்பட்ட நானும் , அகிலனும் அலறிகாயை பறித்து ,வெட்டி சோறுடன் கொண்டு போய் வைத்தோம். அது சாப்பிடவே இல்லை. அந்த வீட்டுகாரர் தங்கள் நாயை கொலைசெய்யும்படி வந்து சொல்வார்கள். அழுவார்கள். கிட்டு அப்பாவைக் கொண்டு வந்த போது, கட்டில்லுகு கீழுக்கு  போய் படுத்துகொண்டது. அதுக்கும் எதோ புரிந்திருக்க வேண்டும். 
சத்தியமனை இல் அதிகம் சுழண்ட நான் அவர்களிடம் விடை பெற்றுக்கொண்டு ,சுழிபுரம் விக்டோரியா கல்லூரியைப் பார்த்தேன். சாயந்தர நேரமாகி இருந்ததால், பாடசாலையில் மாணவர்கள் இல்லாமல் வெறிச்சுபோய் இருந்தது. பக்கத்தில் எனது bus stand . மீண்டும் என் ஆரமபகாலங்கள் வந்து போயின. பக்கத்தில் பறாளாய் முருகன் கோவில், போகமுடியவில்லை. அதனூடாக பண்ணாகம் வழக்கம்பரை அம்மன் கோவில் மைதானத்தை வந்தடைந்தோம். பிரசித்ஹ்டி பெற்ற வட்டுகோட்டை மகாநாடு நடந்த மைதானம் .. நான் சிறு பிள்ளையாக , கையில் இரத்தம் கிழித்த காட்சிகளையெல்லாம் பார்த்திருக்கிறேன் . எங்கள் அப்பாவும் அந்த மகாநாட்டை பார்த்திருக்கிறார்.
பினர் அமிர்தலிங்கம் பிறந்த வீடு வழியாக சித்தன்கேர்னி ,சங்கானை, சண்டிலிப்பாய், மானிப்பாய் ஐ வந்தடைந்தோம். இந்த இடம் மட்டும் கொஞ்சம் நகரமயமாகி இருந்தது. food city , coffee shop, saloon என்று புதிய வடிவில் இருந்தது. மானிப்பாய் hospital புதிய பச்சை வர்ணத்துடன் இருந்தது. church அப்படியே இருந்தது. அதற்க்கு பக்கத்தில் இருந்த்த புலிகளின் காரியாலயம் மீண்டும் உரிமையாளரின் வசம் போனது போல, மிக நீர்தியாக சீரமைக்க பட்டிருந்தது. பக்கத்தில் Hindu ladies school மாணவர்கள் இல்லாததால் சோபை இழந்திருந்த்தது. பழைய கிட்டு பூங்காவை காணவில்லை. எதிரில் இருந்த புகழ் பெற்ற ஆணைகோட்டை police station ஐயும் காணவில்லை. ஓட்டுமடத்தில் போலீஸ் வழிமறித்து சோதனை நடத்தினர். திரும்ப யாழ்பாணத்தை அடையும் வரை பாரிய மாற்றங்களை பார்க்க முடியவில்லை. 
அடுத்த நாள் காலை நந்தன் என்ற சாரதி, எனக்கு ஒரு நல்ல சகோதரன் ஆகினார். அவருடன் நான் கோட்டை செல்வதற்கு அனுமதி கேட்டிருந்தேன். இரவு ஷோபாசக்தி இன் தகவல் கண்டு ,அவரின் ஊரான அல்லைபிட்டியின் வெண்மணல் கடற்கரையையும் பார்த்து வர முடிவு செய்தேன். முதலில் கோட்டைக்கு போனோம் .பழைய பல நினைவுகள் வந்து போனது. நிச்சாமத்தின் விடிவுக்காய் வாழ்ந்த தருமாமா , சின்ராசு மாமா, விகின்ராசு மாமா, பசுபதிமாமா, ராசையா மாமா என்று பல பேர். அவர்களின் சிறை வாழ்கை யின் போது எங்களையும் அப்பா கோட்டை சிறைக்கு கூட்டி  செல்வார். பின்னர் அண்ணா அங்கு இருந்தார். அதனால் அங்கு செல்லவேண்டும் என்று முடிவு எடுத்தேன். முதன் முதல் கோட்டையில் அண்ணாவை பார்க்க சென்ற போது நான் கருப்பு, சிவப்பு சட்டை போட்டிருந்தேன். ஓர் அதிகாரி நீயும் PLOTE ஆ என்று கேட்டான். அப்போதுதான் தெரியும் அந்த அமைப்புக்கு ஒரு வர்ணம் இருக்கு என்று. பின்னர் அந்த அதிகாரி கடுமையாக அண்ணாவை திட்டிக்கொண்டு இருந்தான். 84Russian Model pistol வைத்திருந்தான் இன்றும், அது தங்களிடம் கூட இல்லை என்றும் சொல்லிக்கொண்டு இருந்தான். அண்ணா மிகவும் மெலிந்து போய் இருந்தார். அவரை நாங்கள் பார்த்த இடம் வெளிகோட்டையில். இன்று அது முற்றாக அழிக்கபட்டு இருந்தது. அண்ணாவை சிறை வைத்த உள்கோட்டைகுள் சென்றோம். அது மிகவும் கொடுமையாக இருந்தது. மதில் சுவருக்குள் குகை போல. அதுக்குள் இனொரு குகை இருந்தது . அதில் பல பெயர்கள் எழுதப்பட்டு இருந்தது. ஆனால் அண்ணாவின் பெயர் இருக்கவில்லை. சாதாரண கைதிகளை பார்வையிட்ட அந்த இடமும் அழிக்கபட்டு இருந்தது. அங்கிருந்து பார்த்த போது தூக்கு மேடை தெளிவாக தெரிந்தது. உள்ளுக்குள் ஒரு வைரவர் இருந்தார். மற்றும்படி எதுவும் இருக்கவில்லை. அண்ணா சிறை இருந்த போது நான் எழுதிய சில கவிதைகள் "தாயகம் கவிதைகள் அறுபத்தாறு" இல் வெளிவந்தது. அதை இதனோடு இணைத்துள்ளேன். 
.அங்கிருந்து திரும்பவும் , Stadium, Library, Veerasingam ஹால் அதற்க்கு அருகில் புதிய நீதிமன்றம் கட்டபடுவதைப் பார்தேன்.பின்னர்  , பண்ணை பாலத்தின் ஊடாக அல்லைப்பிட்டி சென்றோம். அந்த நேரத்தில் நந்தனிடம் நிறைய பேசுவதற்கு சந்தர்பம் கிடைத்தது. நான் இல்ல நேரத்தில் ஒரு இளவயது பையனின் வாழ்வு எப்படி இருந்தது. அதற்க்கு எப்படி முகம் கொடுத்தார் என்று பல விடையங்களை கேட்டு அறிந்தேன். அல்லைபிட்டியை வந்தடைந்தோம். அந்த கடற்கரையை முதன் முதலாக பார்த்தேன். அழகோ அழகு . வெண்மையுடன் நீலகடல் சேர்ந்து புதிய வடிவம் தந்தது. மக்கள் யாரும் இல்லை. ஒருசில ஆர்மி இருந்தார்கள். கடற்கரைக்கு எதிரில் ஒரு கட்டிடம் நொறுங்கி கிடந்தது. என்ன என்று கேட்டேன். சிறு மௌனத்தின் பின்னர் "அது மாவீரர் மயானம் " என்று சொன்னார். உண்மையில் அரசியலுக்கு அப்பாற்பட்டு கண்ணீர் வந்தது. அந்த உயிர்களுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்று தோன்றியது. இரு கை கூப்பி வணங்கினேன். 
அல்லைபிட்டி கடற்கரையை தாண்டி திரும்பவும் ஊருக்குள் வந்தோம். ஷோபாசக்தியை தெரிந்தவர்கள் நிறைய ஆட்கள் இருந்தார்கள். அதிகம் அட்டகாசம்  பண்ணி இருப்பார் போல. 
அங்கிருந்து கிளம்பி திரும்பவும் "சத்திமனை" செல்ல முடிவு செய்தேன். இம்முறை மானிப்பாய் ரோடு வழியாக போனோம். இடையில் சங்கானை பலநோக்கு கூட்டுறவு சங்கத்தில் பரனை பார்க்க முடிந்தது. யுத்தம் மனிதர்களை , உறவுகளை , உணர்வுகளை எல்லாம் எவ்வளவுக்கு சிதைத்துள்ளது என்பது புரிந்ததுகொள்ள முடிந்தது . கண்ணோரம் கண்ணீர் ஓடிகொண்டே இருந்தது. பரன் எங்கள் வீட்டுக்கு அருகில் வாழ்ந்த அண்ணாவின் நண்பன். அதிவிடவும் ராஜசுந்தரம் மாஸ்டர் இன் மகன். ஒருகாலத்தில் அவர்கள் வீட்டில் ஜனகூட்டமாக இருக்கும். விக்டோரியா கல்லுரி அதிபர் ,சங்கானை பலநோக்கு கூட்டுறவு சங்க தலைவர், சுதந்திரகட்சி பிரமுகர் ,விளையாட்டு வீரர் என்று நிறைய முகங்களுடன் ,நல்ல மனிதர் என்பது தான் முதன்மையானது. அவரையும் இந்த போராட்டம் விட்டுவைக்கவில்லை. உரிமை கோரபடாத இயக்கத்தால் கடத்தப்பட்டு காணமல் போனார். குற்றசாடில் ஒன்று எங்கள் அண்ணாவை காட்டிகொடுதார் என்பதும் தான். உண்மை எங்களுக்கு மிக தெளிவாக தெரியும். 
இம்முறை வீடில் இருந்து நிறைய தேவையான ஆவணங்களையும் எடுத்துகொண்டு வந்தேன். என் வீட்டுக்குள் வந்திட்டேன் . திரும்பவும் அடிக்கடி வரமுடியும் என்ற நம்பிக்கையால் மிக சந்தோசத்துடன் "சத்தியமனை" இல் இருந்து திரும்பினேன். இரவு எனது அக்கா ஒருவரை பார்பதற்காக புத்தூர் சென்றேன். சில இடங்களில் மட்டும் சோதனை செய்தார்கள். அதிகம் சிரமம் இருக்கவில்லை. அரச அதிபரின் வண்டி என்பதாலோ தெரியவில்லை. வரும் போது இரவு 10 மணியாகி இருந்தது. நல்லூர் கோவில் பக்கத்தில் மாங்கோ என்று ஓர் உணவு விடுதி . சுமாரான உணவுதான் .இரவு நல்ல  உறக்கம். காலை என் அப்பாவின் 80 வது பிறந்ததினம். பங்குனி 5. மனதில் சில ஏற்பாடுகளுடன் உறங்க போனேன்.

அதிகாலை எழுந்தேன். அப்பாவின் 80 வது பிறந்த தினம்,(1931-03-05) இன்று. அவர் உயிருடன் இருந்த காலம் வரை அவரை ,என் வயசின் வளர்ச்சிக்கு ஏற்ற வாறு என் அன்பையும் , சந்தோசங்களையும் பகிர்ந்து இருக்கிறேன். அப்புறம் என் மகள் அவரின்  பிறந்த தினத்தை எனக்கு ஞாபகபடுத்தும் அளவுக்கு அவற்றின் தாக் கத்தை அவளுக்குள் ஏற்படுத்தி இருந்தேன். முதலில் அவர் வளர்ந்த கீரிமலை போக முடிவு எடுத்தேன். அவர் பிறந்த ஊரான கொலங்கலட்டிக்கு போக எனக்கு மனசு வரவில்லை. சாதி என்கிற பலமான வேலி அந்த உறவில் இருந்தது. புதிய உறவு தொடங்க வருவதாகக ,அந்த உறவினர்களிடையே பயத்தை ஏற்படுத்த நான் விரும்பவில்லை. அகவே கீரிமலை செல்ல முடிவு எடுத்தேன். அவரை அவரின அக்காதான் வளர்த்தார். முதலில் கீரிமலையிலும், பின்னர் கொழும்புவிலும் வளர்ந்தார். கீரிமலை செல்வதென்றால் மாவிட்டபுரம் கோவில் தாண்டி தான் போகவேண்டும். அப்பாவின் பொது வாழ்க்கையில் அந்த கோவில் தவிர்க்க முடியாத பங்கு வகிக்கிறது. 1968 இல் நடந்த கோவில் பூரடத்தின் முனோடியாக 1966 oct 21 நடந்த போராட்டம் முக்கியமானது. அதில் அவரின அக்காவின் கணவர் உயர் சாதியினரின் முன்வரிசையின் நின்றபடி ," உந்த சிவப்பு சேர்டு போட்டவனுக்கு நல்ல அடியுங்கோடா . இவனுக்கு என்ன பிரச்னை என்று இங்கு  வந்து கத்துறான்? " என்று சொல்லி அடித்தாராம் என்று அப்பாவின் நண்பர்கள் சொல்ல கேட்டதுண்டு. 
கச்சேரியில் இருந்து புறப்பட்டு ,கஸ்துரியார் ரோட்டு, KKS  ரோட்டு வழியாக போனோம்.
பல பழைய  நினைவுகள் வந்து போயின. கொக்குவில், கோண்டாவில்,இணுவில் ஊடடாக சுன்னாகம் வந்தோம் , STN நவரத்தினம் மாமாவின் கடையும் வீடும் அங்கு தான் இருந்தது. எங்கள் உறவு என்று நாங்கள் கொண்டாடிய மாமா.மத நம்பிக்கை மட்டுமல்ல, மூட நம்பிக்கையிலும் நாட்டமுள்ள  அவர், அப்பாவின் நல்ல நண்பராக இருந்து இருக்கிறார். பல நாட்கள் அவர் வீடில் தூங்கி இருகிறோம். இன்று அங்கு வேறு யாரோ இருந்தார்கள். அங்கிருந்து தெல்லிபளையூடாக மாவிட்டபுரம் போனோம். சுன்னகதிக்கு அப்பால் சன நடமாட்டம் குறைய  தொடங்கியது. தெல்லிபலையில் முற்றாக வெறிசுபோய் இருந்தது. அப்பாவின் சகோதரியின் மகள் இருந்த வீடு உடைந்து போய் இருந்தது. இடையிடையே ஆர்மி முகாம்கள் இருந்தன. திடீரென இது தான் மாவிட்டபுரம் கோவில் என்று டிரைவர் தம்பி சொன்னார்.
ஒரு காலத்தில் அதன் கோபுரத்தை பார்த்து வியந்து இருக்கிறேன். கதவுகள் மூடபட்டு இருந்தன. அதன் முன்பாக ஒரு ஆர்மி முகாம் இருந்தது. சில பாதைகளின் வழிகாடியும் இருந்தது. அதில் ஒரு அதிர்ச்சியான  விஷயம் ,ஒரு  சிங்கள ஊரின் பெயரும் இருந்தது. திடீரென அது எப்படி வந்தது என்று கேட்பதுக்கும் யாரும் இருக்கவில்லை. எனது கணிப்பின் படி அது கடற்கரை ஓரத்தில் இருக்கும் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். இறங்கி அதிக நேரம் நிக்க முடியவில்லை. அதற்கான சூழல் அங்கு இருக்கவில்லை. தொடர்ந்து கீரிமல நோக்கி புறப்பட்டோம். 
மாவிட்டபுரம் கோவிலில் இருந்து கீரிமலை போகும் பாதை மிகுந்த பயத்தை தந்தது . ரோடு இல் ஆர்மி வண்டி கூட பார்ப்பது அபூர்வமாக இருந்தது.
கண்ணிவெடிகள் இருப்பதாக சாலை ஓரம் இரண்டிலும் அறிவுறுத்தல் பலகைகள் இருந்தன வாகனத்தின் இடது பக்கத்தில் தான் நான் இருந்தேன். திடீரென பெரிய பெரிய வாகனங்கள்  தென்பட்டன. என்ன என்று பார்த்த போது , அங்கு மிக ஆழமாக நிலத்தை தோண்டி மண்ணும், கனிமங்களும் எடுதுகொண்டிருந்தர்கள்.
இவை எங்கு காங்கேசன் சிமெண்ட் தொழிட்சாலைகா செல்கின்றன என்று  கேட்டேன், "இவை தான் அக்கா பிரச்னை. இவை எல்லாம் தெற்குக் தான் செல்கின்றன" என்றார் டிரைவர். இவை பற்றி எமது அரசியல் வாதிகள் பேசுவதில்லைய என்று கேட்ட போது, "அவர்களுக்கு இது பற்றி நினைவுக்கு வரும் போது மட்டும் அறிக்கை விடுவார்கள்,பின்பு மறந்து விடுவார்கள்" என்று சொனார்.என் மனதில் நியாயமான  கவலை எழுந்தது. புகைப்படம் எடுக்க மட்டும் தான் என்னால் முடிந்தது.
அந்த பெரிய குழிகள் ,யாழ்ப்பாணத்தின் பொருளாதார சவகுழிகளாக  எனக்கு பட்டன.தொடர்ந்து வாகனம்  சென்றது. என்னால் வலது பக்கம் திரும்பி காங்கேசன் ஆலையை பார்க்க முடியவில்லை. திரும்பி வரும்போது பார்க்கலாம் என்று இருந்து விட்டேன்.    .பொதுவாக மரணவீட்டில்  இருந்து பெறப்படும் அஸ்தியை கீரிமலையில் கரைப்பது இந்துக்களின் ஐதீகம். மரணம் மலிந்த எம் ஊரில் சன கூடம் மிக குறைவாக இருந்தது. மிக சில கடைகள் இருந்தன. ஆர்மி அதிகமாக இருந்தார்கள். கடலில் எல்லை போட்டு குளிக்கும் இடத்தை தீர்மானித்து இருந்தார்கள். கடல் மிக அழகாக அமைதியாக இருந்தது, 

Saturday 20 October 2012

என்னை மீண்டும் குழந்தை ஆக்கிய என் குழந்தைகளுடனான அமெரிக்கப் பயணம்.


என்னை மீண்டும் குழந்தை ஆக்கிய என் குழந்தைகளுடனான அமெரிக்கப் பயணம்.

by Buby Ravi on Friday, July 20, 2012 at 3:35am ·
 வளரத்  தொடங்கிய காலத்தில் இருந்து "அமெரிக்க ஏகாதிபத்தியம்",சிக்காகோ மேதினம், சுரண்டல், முதளித்துவம் ...வியட்னாமில் போர் ,அதன் புகைப்படங்கள், அதனால்  ஏற்ப்பட்ட ஆவேசங்கள் என்றே வளர்ந்தேன். வளர்ந்த பின்பும்  முதலில் சீன ,கியுபா இரண்டுக்கும் எப்படியாவது போய்ப் பார்த்திட்டு வரவேணும் என்றே  ஆசைப்பட்டேன். பின்னர் வளர வளர இந்தியா ,வியட்னாம், மாலைதீவு ..இப்படிப் போகவேணும் என்று நினைத்தேனே தவிர அமெரிக்க பற்றி நினைத்தது கூட இல்லை. . ஆனால் என் இரு குழந்தைகளும் அங்கு படிக்கும் சூழல் உருவானது. மகள் Genetics - Cancer இல் Phd கல்வியும், மகன் Aviation துறையும் படித்தார்கள். மகளின் முதுமாணி பட்டமளிப்புக்கு போகக் கூட நினைக்கவில்லை. ஆனால், தனது தம்பியின் பட்டமளிப்பு விழாவிற்கு வரும்படி எனது மகள் வலியுறுத்தினார். 20 வருட  Diabetes இனால் வலது கண்  Retinal detachment  பாதிப்படைந்தது. பார்வை மிகவும் குறையத் தொடங்க  இடது கண்ணிலும் பிரச்னை ஆரம்பித்தது. என் கணவருக்கு ஓய்வு இல்லை. ஆர்வமும் இல்லை. சரி, என் குழந்தைகள் வாழும் சூழலைப் பார்க்கலாம் என்று முடிவெடுத்தேன். தனக்குக் கிடைக்கும் புலமைப்பரிசில் பணத்தில் சமாளிக்கலாம் என்று கட்டாயப் படுத்தி விசா எடுக்க வைத்தார்கள். விசாவிற்க்கும் நம்பிக்கை இன்றியே சென்றேன். 5 வருடங்கள்  கிடைத்தது. அதன் பிறகும் குழப்பம். குழந்தைகளை கஷ்டப்படுத்த விருப்பம் இல்லாமல் இருந்தது. பலரின் உபதேசங்களால் கொழும்பில் இருந்து முதலில் பாரிஸ் சென்றேன். 
பாரிஸ் ஏர்போர்ட் சாதாரணமாகத் தான் இருந்தது. கைத்தொழில் புரட்சியில் பல மிரட்டல்களைக் காட்டிய நாடு. அட நம்ம சிங்கப்பூர் இதைவிட நல்லாய்  இருந்ததே என்று நினைத்தேன். அமெரிக்கா செல்வதற்காக Terminal-2 க்கு போகச் சொன்னார்கள். ஆட்களற்ற ஒரு பெரிய வண்டியில் நானும் டிரைவரும் மாத்திரம். பல தரிப்பிடன்களைக்  கடந்து அது போகுது போகுது ....போய்க்கொண்டே இருந்திச்சுது. Terminal-2 குள்  நுழைந்தேன் . அதன் அழகையும் ,அமைப்பையும் சொல்ல என்னிடம்  கவித்துவம் இல்லை. அதன் கூரை ஒளி புககூடியதாகவும் ,விசாலமும் ,ஒழுங்கும்  , பிரமிப்பாக இருந்தது. 7 மணிநேரம்  அங்கு தாங்க வேண்டும்.   முதலில் WiFi கிடைக்குமா என்று பார்த்தேன். credit card இல் பணம் செலுத்தும்  படி கேட்டது. சரி phone பண்ணலாம் என்றால் என்னிடம் Euro Coins இல்லை. என்னிடம் இருந்த இருபது யூரோவை மாற்ற மனம் வரவில்லை. தண்ணீர் குடிக்கப் போய்க் கேட்டேன். மூன்று யுரோ என்றார்கள். உடனே என் நாட்டு ரூபாவிற்கு மாற்றி, என் கணித மூளை செயல்பட்டு , விமானத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று தாகத்திற்கு ஆறுதல் சொன்னது . ஆனால் தகவல் சொல்லவேண்டும், குழந்தைகளும், வீட்டிலும் தேடுவார்களே என்று சுத்திக் கொண்டு , கடைத்தொகுதிகளைக் கடந்து வந்த பின்னர் கண்டுகொண்டேன். 5 euro செலுத்தினால் 30 நிமிடங்கள் உபயோகிக்கலாம் என்று . நான் எடுத்துக்கொண்டது French keyboard ஒரு ஊகத்தில் ஆரம்பித்தேன். ஆனால் "@" குறியீட்டை எப்படிப் போடுவது என்று என்னால் கண்டு பிடிக்கவே முடியவில்லை. பத்து நிமிடங்கள் வீணாகிப் போனது. 
     அமெரிக்கா !  world's busiest Airport "அட்லாண்டா" வந்த போது, என்னடா நம்ம "சென்னை செண்ட்ரல்" தோத்துப் போயிடும் என்று நினைத்தேன். அவ்வளவு  கூட்டம். மகனது இடத்துக்குச் செல்வதற்கு இனொரு விமானம் ஏறவேண்டும், அதற்க்கு ஒரு மணிநேர அவகாசம் மட்டுமே இருந்தது. சோதனைச் சாவடியில் "ஏன் வந்தாய் " என்பதற்கு, மகனின் பட்டமளிப்பு என்றபோது , அந்த அமெரிக்கா குடிமகன் முகம் மலர்ந்து வாழ்த்தியது உற்சாகத்தைத் தந்தது. எனது பைகளை எடுத்துக்கொண்டு அவசரமாக அடுத்த விமானத்தில் ஏறினேன். அவளவு சிறிய விமானத்தை நான் பார்த்ததில்லை. குடிப்பதற்கு ஒரு சிறிய juice paket தவிர ,அந்த ஒரு மணித்தியால பிரயாணத்தில் எதுவும் கொடுக்கவில்லை . அதிக பணம் செலுத்தி டிக்கெட் வாங்கி இருக்கிறோம் என்பதை அவர்கள் தரும் ,குடிபானங்களும், உணவும் சிறிது நேரம் மறப்பைத் தரும். ஆனால் இங்கு அது இல்லை. 

             Little rock Airport. எனது மகன் சுமண்யன். என் அப்பாவின் பெயரின் ஒரு பகுதி. சு- மணியன் . அவர் இறந்து சரியாக ஒரு மாதத்தின் பின் பிறந்தான். பல சிக்கல்கள். உயிர் தப்பியதே அதிசயம். அவனைப் பார்ப்பதற்காகவே எனக்குக் கிடைத்த ஆசிரியர் வேலையைக் கூட நான் தொடர எண்ணவில்லை. ஆறு அடி உயரத்தில் ,என்னை வரவேற்க வந்திருந்தான். ஒவ்வொரு முறைத்  தேர்வும்  Dean's Award பெற்று இருந்தான்.  அழுதுகொண்டே அமெரிகாவிற்கு புறப்பட்ட குழந்தை, இன்று சாதித்து இருக்கிறது.. தனது பட்டப் படிப்பை விடவும் ,மேலதிகமாக ,தனது பகுதி நேர விடுதி பொறுப்பாளர் வேலையினால் கிடைத்த பணத்தில் ,விமான ஒட்டி உரிமத்தையும் பெற்று இருந்தான்.அவன் என்னை ஓடி வந்து கட்டிப் பிடித்த போது  பெருமையாக இருந்தது, மூன்று விமானம்  ஏறிய களைப்பு ஓடிப் போனது. 
 முதலில் அவன் தன்னந் தனியாக போராடி வாழ்ந்த கல்விகூடத்தையும், விடுதியையும் பார்க்க விரும்பினேன். தானும்" இதே நேரம் தான் அந்த ஊரில் வந்து இறங்கினேன்" என்று சொன்னான். ஆள் அரவம் எதுவுமற்று ,அமைதியாக இருந்தது. கொஞ்சம் குளிர். மனசு கனத்தது. ஜனக்கூட்டதையே பார்த்துப் பழகிய எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அவனது விடுதி அறை, :) இது பற்றி சொல்லியே ஆகணுமா? பரீட்சைக்கு படித்து முடித்த பையனின் அறை எப்படியோ  அதைவிடவும் ,பல மடங்கு பரீட்சை கண்ட அறை போல இருந்தது. இரவு விருந்தினர் விடுதியில் தங்கினோம். அடுத்தநாள் என் மகள் சுபாரா வந்தாள். அப்பாவினதும், எனதும்,கணவரதும் முதல் எழுத்துக்காளால் உருவானது அவள் பெயர். பட்டமளிப்பு விழா முடிந்து அடுத்த நாள் , மகளின் ஊரான Pittsburgh க்கு இரு விமானங்கள் எடுக்க வேண்டி இருந்தது. UPMC என்ற எழுத்துக்கள் அந்த ஊரில் எல்லாப் பகுதிகளிலும் இருந்தது. University of Pittsburgh Medical Center அங்கு  தான்  அவள் ஆய்வுப் படிப்பை மேற்கொள்கிறாள். University க்கு மிக அருகில் அவளின் வீடு இருந்தது. மிகவும் சுத்தமாகவும் ,ஒழுங்கு முறையிலும் இருந்தது. இதனை நான் அவளிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை.  Computer கல்வித்  துறையில் உலகத்தில் முதலிடம் வகிக்கும் Carnegie Mellon University பக்கத்தில் இருந்தது.  UPMC ,CMU இரண்டும் அந்த ஊரின் சிறப்பாக இருந்தது. இரு நாட்களின் பின்னர் ,இந்தியாவில் படித்த என் குழந்தைகளின் நண்பர்கள் ,ஒவ்வொரு மாநிலங்களில் இருந்தும் வந்திருந்தனர். எனது பிறந்த தினத்தையும் சிறப்பாக கொண்டாடினர். 
may 26 அதிகாலை Pittsburgh இல் இருந்து வாசிங்க்டன் போனோம்.அமெரிகாவின் தலை நகரம் .வெள்ளை மாளிகை ,பல நாட்டு தூதுவராலயமும் அங்குதான் இருக்கிறது.அடுத்தநாள் ஆபிரகாம் லிங்கனுடைய நினைவு தின விடுமுறை .கூட்டம் அலை மோதியது. தொலைக்காட்சிகளில் பார்த்த WWE ஹீரோக்கள் இளவயசு பெண்களை மோட்டார் வண்டிகளில் ஏற்றியபடி உலா வந்தார்கள். உலகப் போரின் நினைவு தூபிகள்,என்று பல இருந்தன. அதிலும் வியட்நாமில் உயிர் நீத்தவர்களுகும் இருந்தது. என்னால் நடக்கவும் முடியாது, ஆர்வமும் இருக்கவில்லை. அதனால் காரில் . இருந்தபடியே பார்த்தோம். அடுத்தநாள் நியூயார்க் ! பலவின மக்களை ஒரே இடத்தில் பார்க்கும் இடம். அதி பரபரப்பான , ஒளி அலங்காரங்கள் சூழ்ந்த இடம். சங்கர் ,கெளதம் மேனன் படங்களில் பார்த்ததை நேரில் பார்த்தேன். 1,454 அடி உயரத்தில் 120 மாடிகளிக் கொண்ட Empire Stat e Building. English movie  " Sleepless in Sea.ttle" ,சங்கரின் "ஜீன்ஸிலும்" பார்த்த   கட்டிடத்தை  அண்ணார்ந்து பார்த்தேன்
.பக்கத்தில் வெள்ளை நிறத்தவர்கள் ரிக்க்ஷா வண்டியை ஓட்டித்திரிந்தார்கள். அவர்களை நாம் ஏற்றியதைத் தான் பார்த்திருக்கிறேன். அநேகமான ஹிந்தி படங்களில் பார்த்த Brooklyin Bridge , செப்டெம்பர் 11 World Trade  Cen ter எல்லாம்  அருகருகே  இருந்தது .  Statue of Liberty , கடலுக்குள் பாதை , நீண்ட சாலைகள், ஓய்வெடுக்காத  மின் விளக்குகள் என்று நியோர்க் நகரம் ஓய்வின்றி  முழித்துக் கிடந்தது. காற்பந்தாட்டம்  தான் அவர்களது உயிர். அதற்கான மைதானங்கள் அதிகமாக இருந்தன. 


இரவு ,எங்களை மிகவும் நேசித்து வளர்த்த ஆன்டி இறந்ததாக தகவல் கிடைத்தது. தொடர்ந்தும் அங்கு நிற்பதற்கு மனசு ஒத்துழைக்கவில்லை. அதிகாலையில் திரும்பவும் ,மகளின் இடத்திற்கு திரும்பினோம். எனிடம் கனடா விசா இருக்கவில்லை. சுபா மாத்திரம் கனடா சென்றார். 
நாட்கள் பறந்தன. இடையில் பல சுகவீனங்கள் வந்து போயின. மாவோ சொன்ன " செப்பு சல்லியையும் சேமியுங்கள் " என்பதை என் குழந்தைகளிடம் கற்றுக்கொண்டேன்.  எனது மச்சான் இலண்டனில் இருந்து வந்து பார்த்தான். எனது நண்பர்கள் பலரும் பேசினார்கள். எனது நபி ஒருவர் கனடாவில் இருந்து வந்தார். எனது குழந்தைகளின் தமிழ் தெரியாத நண்பர்களுக்கு நானும் தாய் ஆனேன். அதில் ஒரு சிங்கள நண்பியும் இருந்தார். இன, மொழி, நிறம்  மறந்து அவர்களின் நெருக்கம் புதிய பல கதைகள் சொன்னது. பிரிவினை தூவும் பெரிய மனிதர்கள் அங்கு இருக்கவில்லை. சமூக அக்கறையுடனும், பொறுப்புடனும் அந்த PhD படிக்கும்  குழந்தைக l இருந்தது  சந்தோசமாக  இருந்தது.கல்வியில் மட்டுமல்லாது  ,தொழில் நுட்பத்திலும்  உலக அரசியல் ,நாட்டு நடப்புகள் எல்லாம் அறிந்து இருந்தார்கள்.பெண்களும்,ஆண்களும் சமையல் செய்தார்கள். 
ஊர் திரும்புவதற்கான இறுதி நாட்களில், எனது மகளின் ஆய்வு கூடம் மீண்டும் சென்றோம். அவர் கான்சர் செல்லுகள்  வளரும் வேகத்தை ஒப்பிட்டுக் காட்டினார். என் விரல் பிடித்து நடந்த குழந்தை எதோ ,எதோ எல்லாம் சொல்லியது, காட்டியது. 
Football.
 23 வருடங்களின் பின்னர் சைக்கிள் ஓட்டினேன். அவளின் சைக்கிளுக்கு "SUBARU" என்று பெயர் வைத்தோம்.நாயகரவின் மறு முனையான Lake Er i e ,உலகத்தில் நான்காவது நீளமான ஆறு அது. The Cathedral of Learnin g"  மிக உயரமான கல்வித் தொகுதி . நூற்றாண்டுகளான சர்சுகள்,இப்படி நிறைய பிரமிப்புகள் இருந்தாலும், என் நாட்டின் இயற்கையும், பேரழிவுகளின் பின்னரும், என் நாடு என்று சொல்லி வாழும் ,என் சனத்தையும் எதோடு ஒப்பிட? கடலில் கூட மூழ்காத என் தேசம், அரசியல் வாதிகளின் வாய்க்குள் கிடந்தது அல்லாடுகிறதே. இன்றும் அது அமைதி கொள்ளக் கூடாது  என்பதில் வெளிவிட வாழ்வாதிகள் கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கிறார்கள். என் குழந்தைகளிடம் கேட்டதெல்லாம், உங்கள் அறிவு இந்த சமூகத்துக்கு ஆனதாக  இருக்கவேண்டும் என்றே! 
ஊர் திரும்பும் அன்று ,23, 22 வயசுக் குழந்தைகள் 2, 3 வயசுக் குழந்தைகள் ஆகி தேம்பி அழுதது , இன்றுவரை ஆறவில்லை. மீண்டும் நீண்ட பிரயாணம். Pittsburgh ,Detroit,( Michigan இனுடைய பெரிய நகரம் ) Amsterdam( Netherlands இன்  தலைநகரம் ) பின்னர் Doha . நம்ம நாடு வந்து சேர்ந்தேன்! 
குறிப்பு :-
எனது சகோதரனும், தோழனுமான ஒரு உறவு என்னிடம் கேட்டார், " என்ன அக்கா  அமெரிக்க எப்படி இருக்கிறது? உங்கள் குழந்தைகள் அமெரிக்காவில் படிப்பது பற்றி உங்கள் தோழர்கள் என்ன சொல்கிறார்கள் ? " என்று சுவை ததும்பக் கேட்டார். இது பற்றி ஒரு கவிதை கூட பத்திரிகையில் வந்தது. அதற்க்கு என் மகன் சொன்னான் " விமானத்தைக் கண்டு பிடித்த ஊரில் ,அது பற்றி படிப்பது வியப்பில்லை. எம்மை அடிமைப் ப்படுத்தி ஆண்ட , நாட்டின் சட்டத்தைப் படித்தால் தான் தப்பு என்று" பிள்ளைகள் தெளிவாக இருக்கிறார்கள்.சுப்பிரமணித்தாரின் வீரத்துடன், சத்தியமும்  மணக்கும்        " சத்தியமனை" இந்த தேசத்தின் மக்களுக்கானது. அந்த உணர்வுடன் அவர்களை வளர்த்திருக்கிறேன் என்று நம்புகிறேன். 
Like ·  ·  · Share · Delete